சென்னை:
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக திரண்டது போல நீட் பிரச்சனைக்காக ஒன்றுகூடி குரல் கொடுக்கவும் மாணவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி உள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் குறுஞ்செய்திகள், மற்றும் வீடியோக்கள் பரப்பபட்டு வருகின்றன.
நீட் போராட்டம் குறித்த வீடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவரும், வாலிபரும் பேசுகிறார்கள்.
நீட் பிரச்சனைக்காக மெரினாவில் திரண்டுள்ளோம். அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனை மையமாக வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோவில் பேசும் இளம்பெண்ணும், வாலிபரும் யார்? என்பது தெரியவில்லை. அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த வீடியோ எந்தெந்த செல்போன் எண்களில் இருந்து பரப்பப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல்களை அனுப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.