கோப்பு படம் 
செய்திகள்

செய்துங்கநல்லூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 6-வது நாளாக தொடர் போராட்டம் - 331 பேர் மீது வழக்கு

செய்துங்கநல்லூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 6-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 331 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

செய்துங்கநல்லூர்:

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் புது தெருவில் அனைத்து சுற்றுவட்டார ஜமாத் இயக்கம் மற்றும் கட்சி கூட்டமைப்பு சார்பாக என்.ஆர்.சி. சி.ஏ.ஏ., என்.பி.ஆர். சட்டங்களை எதிர்த்து கடந்த 26-ந் தேதி முதல் மாலை முதல் இரவு வரை முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 6-ம் நாளான நேற்று தொடர் முழக்க போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சமூக சேவகர் அபுதாஹீர் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் மத்திய- மாநில அரசுக்கு எதிராகவும், குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 40 பெண்கள் உள்ளிட்ட 82 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மேலும் 249 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.