கோப்பு படம் 
செய்திகள்

புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய கார் பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்

புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

மாலை மலர்

சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் அருகே அனிச்சங்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை போலீஸ்காரர்கள் பார்த்தீபன், ஏழுமலை, சுப்பிரமணி ஆகியோர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது புதுவையில் இருந்து வந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை ஜீப்பில் விரட்டி சென்றனர்.

போலீசார் விரட்டி வருவதை அறிந்த கார் டிரைவர் சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் காரை சோதனையிட்ட போது அந்த காரில் 4 அட்டை பெட்டிகளில் பீர்பாட்டில்களும், 4 அட்டை பெட்டிகளில் பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

விசாரணையில் இந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து திருவண்ணாமலைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடிவருகிறார்கள்.