செய்திகள்

கார், மோட்டார் சைக்கிள் விபத்து: மதுரை வக்கீல்கள் 3 பேர் பலி

கார், மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 வக்கீல்கள் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

மதுரை:

மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் கொண்டல்சாமி, அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி. இவரது மகன் சரவணன் (வயது28), வக்கீல். நேற்று இரவு மாட்டுத் தாவணியில் இருந்து சரவணன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப் பட்டார். பூ மார்க்கெட் அருகே வந்தபோது எதிர் பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மதுரை மாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கே.புதூரை சேர்ந்த கருப்பையன் மகன் கோபாலகிருஷ்ணன் (37). மதுரை அனுப்பானடியை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்கண்ணன் (35).

இருவரும் வக்கீல்களாக பணிபுரிந்து வந்தனர். வழக்கு காரணமாக வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு காரில் சென்றனர். காரை மதுரையை சேர்ந்த கவுதம் (24) ஓட்டினார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் திருவண்ணா மலை மாவட்டம் சந்த வாசல் முனியந்தாங்கல் ஏரிக்கரை அருகே கார் வந்தது. அப்போது முன் இருக்கையில் தூக்கத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் காரின் ஸ்டியரிங் மீது சாய்ந்துள்ளார்.

இதனால் கார் நிலை தடுமாறி புளியமரம் மீது மோதியது. இதில் கோபால கிருஷ்ணன், ராஜேஷ்கண்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

டிரைவர் கவுதம் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை சந்தவாசல் போலீசார் மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.