தீப்பிடித்து எரியும் கார். 
செய்திகள்

கோவையில் தீப்பிடித்து எரிந்த கார்- சாயப்பட்டறை அதிபர் மனைவியுடன் உயிர் தப்பினார்

கோவையில் இன்று காலை திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததில் சாயப்பட்டறை அதிபர் மனைவியுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர்:

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 47). சாயப்பட்டறை அதிபர். இவரது மனைவி தனபாக்கியம் (43). இவர்கள் 2 பேரும் தங்களது காரில் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக புறப்பட்டனர். காரை குணசேகரன் ஓட்டி வந்தார். கார் காலை 8.30 மணியளவில் கனியூர் சுங்கச் சாவடி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை பார்த்த குணசேகரன் காரை ரோட்டோரமாக நிறுத்தினார்.

பின்னர் காரில் இருந்த தனது மனைவி தனபாக்கியத்தையும் காரில் இருந்து இறக்கினார். சிறிது நேரத்தில் காரில் மளமளவென தீ பிடித்தது கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் இது குறித்து குணசேகரன் பீளமேடு, கருமத்தம்ப்பட்டி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் காரில் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அனைத்தனர். இருந்த போதிலும் கார் முழுமையாக எரிந்து நாசமானது. காரில் கரும்புகை வந்ததும் குணசேகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் காலை நேரத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.