உளுந்தூர்பேட்டை:
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது49). என்ஜினீயர். இவரது மனைவி மேனகா (45). இவர் நேற்று, தனது மகள் அமிழ்தினி (12), மகன்கள் ஜெகதீஷ் (14), லோகேஷ் (16), மற்றும் உறவினர்கள் ராணி (25), இவரது மகள்கள் அர்ஷிதா (4), தனுஷாயி (1), ஆகியோருடன் சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு காரில் புறப்பட்டனர். காரை சிங்கம்புணரி கிராமத்தை சேர்ந்த பாலன் (37) ஓட்டினார்.
இந்த கார் உளுந்தூர்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய கார், சாலையோரம் 15 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் என்ஜினீயரின் மகள் அமிழ்தினி சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் வந்த 7 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்த உளுந்தூர் பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு கார் டிரைவர் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் விசாரித்து வருகிறார்.