சென்னை:
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள மேல்வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25). காஞ்சிபுரம் அருகே உள்ள கம்மவர்பாளையத்தில் தங்கி இருந்து கால் டாக்சி ஓட்டிவந்த இவர், கடந்த மாதம் 25-ந்தேதி மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் தற்கொலை வழக்குப்பதிவு செய்த நிலையில், ராஜேஷ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு பேசிய வீடியோ காட்சி ஒன்று நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் “நான் பாடியில் இருந்து நந்தம்பாக்கம் நோக்கி பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது, மற்றொரு பயணிக்காக அண்ணாநகர் பகுதியில் உள்ள சிக்னலில் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார்.
ஏற்கனவே, திருவொற்றியூரில் இதேபோல் சாலையோரம் நான் காரை நிறுத்தியிருந்தபோதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். என் சாவுக்கு போக்குவரத்து போலீசார் தான் காரணம்” என்று மனவேதனையுடன் பேசியிருந்தார்.
ராஜேஷ் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போன் வழக்குப்பதிவு ஆவணத்தில் காட்டப்படவில்லை. ஆனால் அவர் பேசிய வீடியோ காட்சி எப்படி வெளியானது? என்பது போலீசாரிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கிடையே, ராஜேஷ் தற்கொலைக்கு போக்குவரத்து போலீசார் தான் காரணம் என்று கூறி நேற்று முன்தினம் திருமங்கலம் காவல் நிலையம் முன்பும், நந்தம்பாக்கம் தனியார் தொழில் பூங்கா முன்பும் கால் டாக்சி டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜேஷ் பேசிய வீடியோவை அழித்து உண்மையை மறைக்க முயன்றதாக தாம்பரம் ரெயில்வே போலீசார் மீது அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் விசாரித்து வரும் போலீசார், தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் ராமதாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
செல்போன் வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாகவும், சம்பந்தப்பட்ட செல்போன் குறித்தும் விசாரிக்கப்பட்டது. அப்போது, ராஜேஷ் தற்கொலை செய்த இடத்தில் கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்த வீடியோ அழிக்கப்பட்டு, அந்த செல்போன் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.
ராஜேஷின் உறவினர்கள் அந்த செல்போனை ‘பேக்கப்’ செய்து பார்த்தபோது தான், அதில் பதிவாகி அழிந்துபோயிருந்த வீடியோ கிடைத்துள்ளது. அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாய் அதிரடியாக நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை ஒரு புறம் நடக்க ராஜேஷின் தற்கொலைக்கு காரணமான போக்குவரத்து போலீஸ்காரர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியும் தொடங்கியது. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட சிக்னலில் யார்? பணியில் இருந்தார்கள் என்பதை எளிதில் போலீசாரால் கண்டுபிடித்துவிடலாம் என்றாலும், நேற்று இரவு வரை விசாரணை மட்டுமே நடைபெற்றதாக தெரிகிறது.
அண்ணா நகர், திருவொற்றியூர் பகுதியில் குறிப்பிட்ட நாளில் பணிபுரிந்த போக்குவரத்து போலீசார் 64 பேரை அழைத்து விசாரணை நடந்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட போலீசாரை தப்ப வைக்கும் முயற்சியோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுகிறது. தற்கொலை செய்துகொண்ட ராஜேஷை தரக்குறைவாக திட்டிய போக்குவரத்து போலீசார் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ராஜேஷ் ஓட்டிவந்த காரில் பயணம் செய்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.