பூந்தமல்லி:
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருமழிசை மார்க்கெட்டுக்கு செல்ல பூந்தமல்லி நோக்கி காரில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் நிறுவன ஊழியரான அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 27) தனது மோட்டார்சைக்கிளில் அம்பத்தூர் சாலையில் வானகரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வானகரம் அருகே கார் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த ரஞ்சித்குமார் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார், காரின் மேல் பகுதியில் போய் விழுந்தார். இதில் காரின் முன்பகுதி மற்றும் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது.
ஆனால் கார் மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிளில் வந்தவர் பலியாகி இருக்கலாம் என நினைத்த கணேசமூர்த்தி, விபத்தில் சிக்கியவர் தனது காரின் மேல் பகுதியில்தான் விழுந்து கிடக்கிறார் என்பது தெரியாமல் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அவரது காரை பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர். போலீசார் பின் தொடர்வதை அறிந்த கணேசமூர்த்தி, காரை மேலும் வேகமாக ஓட்டிச்சென்றார். காயத்துடன் காரின் மேல் விழுந்து கிடந்த ரஞ்சித்குமார், காரை கெட்டியாக பிடித்தபடி இருந்தார்.
போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று காரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கிய கணேசமூர்த்தி, அப்போதுதான் விபத்தில் சிக்கிய ரஞ்சித்குமார், தனது காரில் வந்து விழுந்து கிடப்பதும், அது தெரியாமல் காரை ஓட்டிவந்து விட்டதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். காயமடைந்த ரஞ்சித்குமார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரி கணேசமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.