செய்திகள்

மேலூர் அருகே கார் விபத்து: சென்னை என்ஜினீயர் மனைவி-மகளுடன் பலி

மேலூர் அருகே டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலூர்:

சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் ஆண்டனி கிறிஸ்டோபர் (வயது46). கணினி மென்பொறியாளர். இவரது மனைவி ஜோஸ்மின் கவிதா (45). இவர்களுக்கு கர்லின் ஜெனோரா (14), லிபிஅனன்சியா (10) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆண்டனி கிறிஸ்டோபர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லைக்கு கடந்த 24-ந்தேதி காரில் புறப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் நிலைதடுமாறிய கார், ரோட்டோரத்தில் இருந்த ராட்சத கிரானைட் கல் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்தது.

காரில் இருந்த ஆண்டனி கிறிஸ்டோபர், அவரது மனைவி மற்றும் மகள்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆண்டனி கிறிஸ்டோபரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

ஜோஸ்மின் கவிதா மற்றும் 2 மகள்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜோஸ்மின் கவிதா, அவரது இளைய மகள் லிபி அனன்சியா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

கர்லின் ஜெனோராவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டயர் வெடித்து கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT