செய்திகள்

500 சதுரடிக்குட்பட்ட வீடுகளுக்கு சொத்து வரி ரத்து: மும்பை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்

மும்பை மாநகராட்சியில் 500 சதுரடிக்குட்பட்ட வீடுகளுக்கு சொத்து வரியை ரத்து செய்வது தொடர்பாக மும்பை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாலை மலர்

மும்பை:

மும்பை மாநகராட்சியில் 500 சதுரடிக்குட்பட்ட வீடுகளுக்கு சொத்து வரியை ரத்து செய்வது தொடர்பாக மும்பை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மும்பை பெருநகரத்தில் அண்மையில் நடந்த மாநகராட்சி தேர்தலில் சிவசேனா, பா.ஜ.க, காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தேர்தலில் சிவசேனா கட்சி வெற்றி பெற்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மும்பை மாநகராட்சியில் வெற்றி பெற்றால் 500 சதுரடிக்குள் உள்ள இடங்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிப்பதாகவும், 500 முதல் 700 சதுரடி வரை உள்ள இடங்களுக்கு 60% வரியை ரத்து செய்வதாக அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இன்று மாநகராட்சி கூட்டத்தில், சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினர் யஷ்வந்த் ஜாதவ், தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரித்ததால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த தீர்மானம் மாநில அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சித்துறையின் ஒப்புதல் கிடைத்ததும் சொத்து வரி விலக்கு நடைமுறைக்கு வரும்.

இந்த திட்டத்தின் மூலம் 14.98 லட்சம் மும்பைவாசிகள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.