பழனி:
பழனி அருகே கொழுமங் கொண்டான் போதுபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது75). விவசாயி இவருக்கு மகள்கள் ராஜேஸ்வரி, வசந்தாமணி, மகன் மகுஸ்டீஸ்வரன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித் தனியே வசித்து வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுக்கு முன்பு ராமசாமியின் மனைவி இறந்து போனார். எனவே அவர் தனது மகன் மகுஸ்டீஸ்வரனுடன் வசித்து வந்தார். தன்னை மகன் நன்றாக பராமரித்து வருவதை அறிந்த ராமமசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகனின் ஆலோசனைபடி தனது பெயரில் கிணற்று பாசனத்துடன் கூடிய 6 ஏக்கர் நிலத்தை மகுடீஸ்வரனின் மகளுக்கு கீரனூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தார்.
சொத்துக்களை கைப்பற்றிய மகன் மகுஸ்டீஸ்வரன் தனது தந்தையை சரிவர பராமரிக்கவில்லை என ராமசாமி ஆதங்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த ராமசாமி நேராக பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் எனது மகன் சொத்தை எழுதி வாங்கிய பின்பு தன்னை சரிவர பராமரிக்கவில்லை தற்போது காசநோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். பெற்ற மகனும் கைவிட்டு விட்டான். ஒருவேளை கஞ்சிகூட எனக்கு கிடைக்கவில்லை. எனவே எனது பேத்தி பெயரில் பதிவு செய்த எனது சொத்துக்கள் பதிவினை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதனையடுத்து அதிகாரிகள் மகுஸ்டீஸ்வரனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில் நான் எனது தந்தையை சரியாக கவனித்து வருகிறேன். அதில் அவருக்கு திருப்தி இல்லை. எனினும் அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன் என்றார்.
அதனை தொடர்ந்து ராமசாமி தனது பேத்தி பெயரில் பதிவு செய்த சொத்துக்களை தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டத்தின்கீழ் ரத்து செய்யுமாறு சப்-கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி அந்த சொத்தின் பதிவு ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சப்-கலெக்டர் அருண்ராஜ் கூறுகையில் பெற்றோரிடம் இருந்து சொத்துக்களை பெற்றுக்கொண்டு வயதான காலத்தில் பராமரிக்காமல் தவிக்க விடும் மகன்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.