செய்திகள்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ - 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். #CaliforniaFire

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் ரெட்டிங் என்ற பகுதிக்கு மேற்கே 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.  இந்த நிலையில் இங்கு வியாழக்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டு அடுத்தடுத்து பரவியது. இதனை அடுத்து வீடுகள் பல தீயில் கருகின. 

வேகமுடன் வீசிய காற்றால் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சூறாவளி தீ ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கி வீடுகளில் உள்ளவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில் மீட்பு பணியின்போது 2 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். சுமார் 44450 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதால், அதனை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.