செய்திகள்

மேற்கு வங்காளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கால நீட்டிப்பு அளித்து ஐகோர்ட் உத்தரவு

மேற்கு வங்காளம் மாநில பஞ்சாயத்து தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஒருநாள் கால அவகாசத்தை நீட்டித்து கொல்கத்தா ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து, அம்மாநில பா.ஜ.க சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் கமிஷன் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என தெரிவித்திருந்தனர்.

பஞ்சாயத்து தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் கடந்த 9-ம் தேதியுடன் முடிந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை கூடுதலாக ஒருநாள் நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தேர்தல் ஆணையத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணி

மாநில தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக அம்மாநில பா.ஜ.க சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்ப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 16-ம் தேதிவரை பஞ்சாயத்து தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தடை விதித்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஒருநாள் நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவெடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.