செய்திகள்

கோவில்பட்டி அருகே கேபிள் ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

கோவில்பட்டி அருகே விவசாயி கொலைக்கு பழிக்கு பழியாக கேபிள் ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது47). கேபிள் ஆபரேட்டரான இவர் தற்போது குடும்பத்தினருடன் கோவில்பட்டி காந்திநகரில் வசித்து வந்தார். கடந்த மாதம் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்புராஜ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முருகன் கைதாகி கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை முருகன் தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் கொப்பம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர் கையெழுத்திட்டு விட்டு கோவில்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.

காமநாயக்கன்பட்டி அருகே உள்ள குருவிநத்தம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் முருகன் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றது.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு காரில் தப்பி விட்டது. தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

பட்டப்பகலில் கேபிள் ஆபரேட்டர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி சுப்புராஜ் கொலைக்கு பழிக்கு பழியாக முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.