ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்களில் சென்ற விமானப்படை வீரர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பலாகோட், சகோதி, முசாபராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழுவுடன், பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.