செய்திகள்

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: பாதுகாப்பு, ரெயில்வேக்கு புதிய மந்திரிகள்

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம் செய்யப்படுகிறது. பாதுகாப்பு, ரெயில்வேக்கு புதிய மந்திரிகள் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது.

பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 2 முறை மத்திய மந்திரி சபையை மாற்றி அமைத்தார்.

மத்திய பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் 14-ந்தேதி கோவா முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்றார். இதை தொடர்ந்து அவர் வசித்து வந்த பாதுகாப்பு துறையை நிதி மந்திரி அருண்ஜெட்லி கூடுதலாக கவனித்து வந்தார்.

இதே போல மத்திய சுற்று சூழல் இணை மந்திரியாக இருந்து வந்த அணில் மாதவ் தவே கடந்த மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்ததால் அவரது அமைச்சகமும் காலியாக இருந்தது. இதனால் இந்த இரு பதவிகளில் புதிய மந்திரிகளை நியமிக்க வேண்டி உள்ளது.

இதற்காக மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம் செய்யப்படுகிறது.

ரெயில்வே துணை மந்திரியாக இருக்கும் சுரேஷ் பிரபு பாதுகாப்பு துறைக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது.

சுரேஷ்பிரபு, பிரதமர் மோடியின் பாராட்டை பெற்றவர். நம்பிகைக்கு உரியவர் என்பதால் பாதுகாப்பு துறை வழங்கப்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

சுரேஷ் பிரபுவிடம் இருக்கும் ரெயில்வே துறை மனோஜ் சின்காவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனோஜ் சின்கா தற்போது ரெயில்வே துறை மந்திரியாக இருக்கிறார். அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு சுரேஷ் பிரபுவின் இடத்தில் அமர்த்தப்படலாம்.

இதேபோல மூத்த மந்திரியாக இருக்கும் கல்ராஜ் மிஸ்ராவின் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு கவர்னர் அல்லது கட்சி பதவி வழங்கப்படுகிறது. ஜூலை 17-ந்தேதி 75 வயது நிறைவடைவதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை பதவி அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக புதிய மந்திரி நியமிக்கப்படலாம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மத்திய மந்திரி உமாபாரதி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கி உள்ளன. இதனால் அவரது பதவியும் பறிக்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.