புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பதற்காக 8500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதற்கான கணக்கெடுப்பு தொடங்க உள்ளது.
இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிப்பதுதான் இந்த பதிவேடு. நாட்டின் ஒவ்வொரு வழக்கமான குடியிருப்பாளரின் விரிவான அடையாளங்களுடன் கூடிய தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் நோக்கம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் கூறியுள்ளது. இந்த தரவுத் தளத்தில் மக்கள் தொகையுடன் பயோமெட்ரிக் விவரங்களும் இருக்கும்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, ஒரு "வழக்கமான குடியிருப்பாளர்" என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர், அல்லது அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்பும் நபரை குறிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு "வழக்கமான குடியிருப்பாளரும்" இதில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடானது, தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான முதல் படியாக கருதப்படுகிறது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி இந்த என்பிஆர் தரவு புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தகவல்களின் டிஜிட்டல் மயமாக்கல் முடிந்துள்ளது.
இப்போது அசாம் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மக்கள் தொகை கணக்கெடுப்புடன், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.