வல்லம்:
தஞ்சை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்தை திரும்பபெற வேண்டும். தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதல் அமைச்சர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் புகுந்து தாக்குதல் நடத்திய நபர்களை உடனே கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், மாணவிகளை தாக்கியவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் குடியுரிமை சட்டத்தை திரும்பபெறவில்லையெனில் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடையும் என தெரிவித்தனர்.
கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த போராட்டத்தை தொடர்ந்து இரு கல்லூரிகள் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.