சரத் பவார் 
செய்திகள்

மக்களின் கவனத்தை திசை திருப்பவே குடியுரிமை சட்டம்: சரத் பவார் சாடல்

நாடு எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை கொண்டு வரப்பட்டிருப்பதாக சரத் பவார் கூறியுள்ளார்.

மாலை மலர்

மும்பை:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து மத வேறுபாடுகளினால் வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. 

இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இந்திய அரசியல் தலைவர்களும், உலக தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வரும் 6 மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்க மறுப்பது ஏன் என  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் பவார். ‘சிறுபான்மையினர் மட்டுமல்ல நாட்டில் ஒற்றுமை வளர வேண்டும் என நினைப்பவர்களும் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் மத மற்றும் சமூக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும். மற்ற சமூகத்தினருக்கு வழங்கப்படும் குடியுரிமை இலங்கை தமிழர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?. 

குடியுரிமை சட்டம் மத்திய அரசின் சட்டமாக இருக்கலாம், ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியது மாநில துறைகள்தான். இதற்கு தேவையான வசதிகள் மாநிலங்களுக்கு உள்ளதா? என்பதையும் பார்க்க வேண்டும். குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை இந்தியா எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான தந்திரங்கள்’என  கூறினார்.