செய்திகள்

மும்பை: பெண் கைதியை சித்தரவதை செய்து கொன்றது தொடர்பாக சிறை அதிகாரிகள் 6 பேர் கைது

மும்பை பைகுலா சிறையில் ரொட்டி திருடியதாக கூறி பெண் கைதியை சித்ரவதை செய்து கொன்றது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சிறை அதிகாரி உள்ளிட்ட 6 பெண் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

மும்பை:

மும்பை பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி மஞ்சுளா ஷெட்டி கடந்த 24-ம் தேதி மர்மமான முறையில் சிறையில் மரணமடைந்தார். 23-ம் தேதி காலை சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் 2 முட்டைகள் மற்றும் 5 ரொட்டிகள் காணமல் போயுள்ளன. இது தொடர்பாக சிறை ஜெயிலர் மற்றும் காவலர்கள் மஞ்சுளாவை தனியறையில் வைத்து விசாரித்துள்ளனர்.

ரொட்டி காணமல் போனது குறித்து தனக்கு தெரியாது என மஞ்சுளா ஷெட்டி கூறியுள்ளதால், ஆத்திரமடைந்த சிறைக் காவலர்கள் மஞ்சுளாவை தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இதனையடுத்து, அதிகமான ரத்தம் வெளியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த செய்தி அனைத்து கைதிகளிடையே காட்டுத்தீயாக பரவியதையடுத்து, சுமார் 200-க்கும் அதிகமான கைதிகள் பைகுலா சிறையில் கையில் கிடைத்த பொருட்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அதிகளவிலான போலீசார்கள் வரவழைக்கப்பட்டு கைதிகளின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதில், ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகியுள்ள ஊடக தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி உள்ளிட்ட கைதிகள் மீது சிறையில் கலவரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இந்த சம்பவம் பெரிதாக வெடித்த நிலையில், மஞ்சுளா சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறை அதிகாரி மற்றும் ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்கு நாக்பாதா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஆறு பேரும் சிறைத் துறையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சிறை அதிகாரி உள்ளிட்ட இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு காவலர்களையும் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்தனர்.