செய்திகள்

தண்டையார்பேட்டையில் ரூ.80 லட்சம் கேட்டு தொழில் அதிபர் கடத்தல்

தண்டையார்பேட்டையில் தொழில் அதிபரை ரூ.80 லட்சம் கேட்டு மர்ம கும்பல் கடத்தி சென்றனர். பின்னர் ரூ. 3 லட்சம் வாங்கி விட்டு விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

ராயபுரம்:

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பக்ரி முகமது (63). தொழில் அதிபரான இவர் பேப்பர் பிளேட் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பக்ரி முகமது நேற்று முன்தினம் காலை தொழுகைக்காக சென்றார். அப்போது திடீரென அவரது அருகில் கார் ஒன்று வந்து நின்றது. அதில் 4 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் பக்ரி முகமதுவின் முகத்தில் மயக்க ஸ்பிரேயை அடித்தார். இதில் மயங்கிய அவரை குண்டு கட்டாக காரில் தூக்கிப்போட்டு கடத்தினர்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த பக்ரி முகமது கூச்சல் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கடத்தல் கும்பல் அவரது வாயில் துணியை அமுக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

பின்னர் பக்ரி முகமதுவை காட்பாடிக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு இடத்தில் அடைத்து வைத்து ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டினர்.

ஆனால் பக்ரி முகமது அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார். இதனால் ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் என கடத்தல் ஆசாமிகள் இறங்கி வந்தனர். முடிவில் ரூ.3 லட்சம் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து தனது நண்பர் ஒருவரிடம் பேசிய பக்ரி முகமது தொழில் வி‌ஷயமாக காட்பாடிக்கு வந்துள்ளேன்.

சென்னையில் தான் அனுப்பி வைக்கும் நபரிடம் ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதன்படி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகில் வைத்து கடத்தல் கும்பலை சேர்ந்த நபரிடம் ரூ.3 லட்சம் பணம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் பக்ரி முகமது உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து அங்குள்ள போலீசில் பக்ரி முகமது புகார் செய்தார். அதனை ஏற்க மறுத்த காட்பாடி போலீஸ் சென்னையில் சென்று புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதன்படி சென்னை திரும்பிய அவர் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

நேற்று காலையில் இருந்து மாலை வரையில் புகார் மனுவை வாங்க மறுத்த போலீசார் இரவு 7 மணி அளவில் பெற்றுக் கொண்டனர்.

துணை கமி‌ஷனர் செசான் சாய், உதவி கமி‌ஷனர் சிராஜுதின், இனஸ்பெக்டர் ஜெயராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் பக்ரி முகமது கடத்தப்பட்ட கார் அடையாளம் தெரிந்தது. இதை வைத்து கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் காட்பாடிக்கு விரைந்துள்ளனர்.