உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள், போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காட்சி 
செய்திகள்

திருச்சியில் ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் - வியாபாரி கைது

திருச்சியில் இன்று குடோனில் பதுக்கி விற்பனை செய்த ரூ.3லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரி ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா, கோட்டை உதவி போலீஸ் கமி‌ஷனர் கோடிலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள குடோனில் போதை பொருட்களான குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரி மங்கள் ராம் என்பவரை கைது செய்தனர். மேலும் 2பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான வியாபாரி மங்கள்ராம்