கள்ளக்குறிச்சி
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் இளையாழ்வார். இவருக்கு யசோதாம்மாள், ஹேமா, குமுதம்(வயது 60) ஆகிய 3 மனைவிகள் இருந்தனர். இளையாழ்வாருக்கு கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்தூர் பகுதியில் சினிமா தியேட்டர், பெட்ரோல் பங்க், வணிக வளாக கடைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.
இந்நிலையில் யசோதாம்மாள், ஹேமாவின் வாரிசுகளுக்கு திருமணம் செய்து வைத்து, சொத்தில் பாகம் பிரித்து கொடுத்து விட்டு மீதி சொத்துகளை 3-வது மனைவி குமுதம் பெயரில் இளையாழ்வார் எழுதி வைத்துவிட்டு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து குமுதம் ஆத்தூரில் தனியாக வசித்து வந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 29-ந் தேதி நடைபெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில் கலந்து கொண்ட குமுதத்தை, கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாகரன் மகன் குமார்(32) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமுதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே கத்தியால் குத்திய குமாரை அங்கிருந்த பக்தர்கள் மடக்கி பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, குமாரிடம் விசாரித்தனர். விசாரணையில் குமாரின் நண்பர்களான தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டியன்(42), நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் அய்யனார்(27), திருக்கோவிலூர் தாலுகா குன்னத்தூரை சேர்ந்த 17 வயது சிறுவன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த சேட்டு என்கிற கஜேந்திரன்(38), இளையாழ்வாரின் இரண்டாவது மனைவி ஹேமாவின் மகளான சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபு மனைவி அலமேலு(55) மற்றும் ராஜா(47) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குமார் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான அலமேலு சென்னையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், பலகோடி ரூபாய் மதிப்புள்ள குமுதத்திடம் இருந்த சொத்துகளை, கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(52) என்பவர் அபகரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக போலி ஆவணம் தயாரித்து வந்துள்ளார். இதை அறிந்த குமுதம், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து முருகன் கைது செய்யப்பட்டு, சிறை தண்டனையும் பெற்றார்.
இந்த நிலையில் தன்னுடைய தந்தை சொத்து தனக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த இளையாழ்வாரின் இரண்டாவது மனைவி ஹேமாவின் மகள் அலமேலுவுடன், முருகன் சேர்ந்து குமுதத்தை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதை செயல்படுத்தும் வகையில் முருகன் தனது அண்ணன் மகனான குமார் மூலம் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் விசாரணையில் வெளியானது.
தொடர்ந்து குமார் உள்பட 7 பேரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் 6 பேரையும், 17 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியிலும் போலீசார் அடைத்தனர். இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, இரு சக்கர வாகனங்கள்-2 மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய அரசியல்வாதி மற்றும் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா? எனவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.