தங்கம் 
வணிகம்

GOLD PRICE TODAY: மளமளவென சரியும் தங்கம் விலை... நகை வாங்க இதுதான் சரியான நேரம்!

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த ஆண்டு (2025) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிவிடும் என்று அப்போது பரபரப்பாக சொல்லப்பட்டது. அவ்வாறு சொன்னபடியே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்வு நின்றபாடில்லை.

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை 'கிடுகிடு'வென விலை ஏற்றம் கண்டபடியே இருந்தது. அந்தவகையில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இதுதான் தங்கம் விலையின் புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு உயர்ந்தது கிடையாது. மேலும் விலை எகிறி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தையும் தொடும் என அதிர்ச்சியூட்டும் செய்தியும் பரவியது. ஆனால் பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, ஆறுதலை கொடுத்தது.

ரூ.1 லட்சத்துக்கு கீழ்...

இப்படியாக விலை ஏற்ற-இறக்கத்துடனேயே தங்கம் பயணித்தது. அதிலும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. எப்போது வேண்டுமானாலும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வரலாம் என சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், விலை குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமான நிலையே இருந்தது.

தங்கம் விலை தொடர் சரிவு

கடந்த 10-ந்தேதியில் இருந்து தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த தொடர் சரிவினால், கடந்த 11 மாதங்களாக ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறையாமல் இருந்த தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சென்றது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.

சவரனுக்கு ரூ.2,040 சரிவு

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.255-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 40-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 215-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.98 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால், அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட்டு வட்டித்தரும் வங்கி வைப்புத்தொகை, அரசு பத்திரங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தங்களுடைய லாபத்தை பதிவு செய்வதற்காக முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகளவு விற்பனை செய்கின்றனர். அமெரிக்க டாலர் மதிப்பு உயருவது உள்பட பல காரணங்களால் தங்கம் விலை சரிகிறது.

தங்கம் விலை குறைந்தது

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும், கிராமுக்கு ரூ.235 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10-ந்தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.9,840 சரிந்துள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

18-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.97,720

17-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,760

16-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,320

15-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920

14-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,00,920

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

18-11-2026- ஒரு கிராம் ரூ.185

17-11-2026- ஒரு கிராம் ரூ.190

16-11-2026- ஒரு கிராம் ரூ.190

15-11-2026- ஒரு கிராம் ரூ.195

14-11-2026- ஒரு கிராம் ரூ.195

SCROLL FOR NEXT