இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், வாகனங்களின் மைலேஜ் குறைவு, என்ஜின் கோளாறுகள் மற்றும் வாகன பொருந்தாமை காரணமாக வாகன ஓட்டிகள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கிய தீர்ப்பு, இந்த விவகாரத்தில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவர் பிரேம்ராஜ் தேவதா என்பவர் வாங்கிய மாருதி சுசுகி 'கிராண்ட் விட்டாரா' வாகனம், E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் அடிக்கடி என்ஜின் செயலிழப்பு அடைந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் 45 நாட்களுக்குள் E20 பெட்ரோலுக்கு உகந்த புதிய காரை வழங்க வேண்டும் அல்லது வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் பதிவுச் செலவு உட்பட மொத்தம் ரூ.20.50 லட்சத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்குச் செலவுக்காக ரூ.10,000 வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. காரில் கலப்பட எரிபொருள் பயன்படுத்தப்பட்டதே பாதிப்புக்குக் காரணம் என மாருதி சுசுகி கூறியதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2023-க்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பாலான வாகனங்களின் பாகங்கள் (எரிபொருள் குழாய், ரப்பர் சீல்கள், இன்ஜெக்டர்கள்) E20 பெட்ரோலின் அரிக்கும் தன்மையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. எத்தனால் பெட்ரோலை விட குறைவான ஆற்றல் அடர்த்தி கொண்டது என்பதால், E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் 5% முதல் 7% வரை குறைவதாகப் பயனர்கள் புகாரளிக்கின்றனர்.
எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை எளிதில் உறிஞ்சும் இயல்புடையது. இதனால் எரிபொருள் தொட்டியில் நீர் படிந்து, என்ஜின் துருப்பிடித்தல் மற்றும் அடைப்பு ஏற்படுகின்றன. பெட்ரோல் பங்குகளில் சாதாரண E10 அல்லது தூய்மையான பெட்ரோல் கிடைக்காமல், E20 மட்டுமே இயல்புநிலை எரிபொருளாக விற்கப்படுவது நுகர்வோரை அதிருப்தியடையச் செய்துள்ளது.
எரிபொருளில் நீர் அல்லது பிற கலப்படங்கள் கலப்பதே என்ஜின் பழுதுக்குக் காரணம் எனக் கூறி, நுகர்வோர் கோரிக்கைகளை நிராகரிக்கின்றனர். கடுமையான பரிசோதனைகள் மற்றும் GPS கண்காணிப்பு அமைப்புகள் மூலம் தரமான E20 பெட்ரோல் விநியோகிக்கப்படுவதாகக் எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இரு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு இடையே தங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கும் என்ஜின் சேதத்திற்கும் யார் பொறுப்பு என்று நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த ராய்ப்பூர் தீர்ப்பு வருங்காலத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கு சட்டரீதியான சவால்களையும், நுகர்வோர் நம்பிக்கையில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்த பெட்ரோல் குழப்பம் நுகர்வோரை மின்சார வாகனங்களை நோக்கி விரைவாக மாறத் தூண்டும் காரணியாகவும் பார்க்கப்படுகிறது.