வணிகம்

விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி- சென்னையில் தங்கம் விற்பனை சூடு பிடித்தது

தங்கம் விலை தினமும் ஆயிரக்கணக்கில் குறைந்து வருவது பொதுமக்களிடம் நகை வாங்கும் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் தங்கம் வாங்க தொடங்கியுள்ளனர்.

சென்னையில் தங்கம் விலை குறைந்ததையடுத்து, நகை விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்துக்கு கீழே குறைந்ததால், மக்கள் மத்தியில் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. திருமண சீசன் மற்றும் விலை சரிவால் தங்கத்தின் தேவை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்த 1 வருடமாகவே மிகவும் உச்சத்தில் இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி, வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற அதிகபட்ச உச்சத்தை தொட்டது. அதன்பிறகு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என்ற விலையிலேயே ஏற்ற இறக்கமாக காணப்பட்டது.

தங்கம் விலை குறைந்தது

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை மிகவும் வேகமாக குறைந்து வருகிறது. சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே குறைந்து விட்டது.

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு, அந்நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு, முதலீடு பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு, டாலர் மதிப்பு உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

தங்கம் விலை குறைந்து வருவது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மக்கள் மத்தியில் நகை வாங்கும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. விலை குறைந்து உள்ள நிலையில் சென்னையில் தங்க நகைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் நகை விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

15 சதவீதம் அதிகரிப்பு

இதுகுறித்து நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-

தங்கம் விலை தினமும் ஆயிரக்கணக்கில் குறைந்து வருவது பொதுமக்களிடம் நகை வாங்கும் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. இதனால் பலரும் தங்கம் வாங்க தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விற்பனை அதிகரித்துள்ளது.

சமீப காலங்களில் தங்கம் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை இப்படியே நீடித்தால் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தேவை அதிகரிக்க வாய்ப்பு

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, இந்தியாவில் நகைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் தங்கம் விலை குறைந்திருப்பதாலும், தற்போது திருமண சீசன் என்பதாலும் நகை விற்பனைக்கு மிகவும் சாதகமாக உள்ளது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டால் பொது மக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையக்கூடும்.

பழைய நகைகள்

தனவந்திரி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் தங்கத்திற்கான தேவை அதிகமாக இருந்தது. நகைகள் மட்டுமின்றி, தங்க கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. பண்டிகை காலத்தில் தங்கம் விற்பனை மதிப்பு அடிப்படையில் கடந்த ஆண்டை விட 15 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விற்பனை அளவானது சிறிதளவு மட்டுமே உயர்ந்தது.

பல நகைக்கடைகளில் 40 முதல் 60 சதவீதம் பேர் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை கொடுத்து மாற்றி புதிய நகைகளை வாங்கினார்கள். தங்கம் விலை குறைந்ததால் சில கடைகளில் பழைய தங்கத்தை மாற்றி வாங்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறக்குமதி குறைய வாய்ப்பு

தங்கம் விலை குறைந்திருப்பது ஏன் என்பது பற்றி நிபுணர்கள் கூறியதாவது:-

கடந்த 2024 - 2025-ம் நிதியாண்டில் ரூ.5.51 லட்சம் கோடியாக இருந்த தங்கம் இறக்குமதி, 2025 - 2026-ம் நிதியாண்டில் ரூ.6.84 லட்சம் கோடியாக அதிகரித்தது.

இந்த நிலையில் அத்தியாவசியமற்ற இறக்குமதியை கட்டுப்படுத்த தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு கடந்த மே மாதம் உயர்த்தியது. இதனால், நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி ரூ.3.32 லட்சம் கோடி முதல் ரூ.3.80 லட்சம் கோடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, வலுவடைந்த அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவை சந்தித்தது.

அக்டோபரில் தங்கம் விலை 6.3 சதவீதம் குறைந்தது. தொடர்ந்து நவம்பர் மாதமும் விலை குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT