வணிகம்

நாமக்கல்லில் மீண்டும் புதிய உச்சத்தில் முட்டை விலை

முட்டை விலை 5 நாட்களில், 25 காசுகள் உயர்வு 670 காசுகளாக நிர்ணயம்.

நாமக்கல் மண்டலத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் தினசரி 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளுக்கு நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மூலம் தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 10-ந் தேதி 650 காசுககளாக இருந்த முட்டை விலை அதன் பின்னர் தினசரி 5 காசுகள் உயர்ந்து வருகிறது.

இதற்கிடையே நாமக்கல்லில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் உற்பத்தி மற்றும் தேவை குறித்தும், முட்டையின் தேவை கேரளாவில் அதிகரித்துள்ளதாலும், வட மாநிலங்களில் முட்டை விலை உயர்ந்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை விலை 675 காசுகளாக உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு முட்டை வரலாற்றில் மீண்டும் புதிய உச்சமாகும்.

முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் கடந்த 5 நாட்களில் மட்டும் 25 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் தற்போது 760 காசுகளாக விற்பனை செய்யப்படும் முட்டை விலை விரைவில் 8 ரூபாயாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ஒரு கிலோ 151 ரூபாயாகவும், முட்டை கோழி விலை ஒரு கிலோ 115 ரூபாயாகவும் நீடிக்கிறது.