நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 நாட்களில் 70 காசுகள் உயர்ந்துள்ளது. தேவை அதிகரிப்பு மற்றும் தீபாவளி பண்டிகை காரணமாக விலை உயர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பண்ணையாளர்கள் மகிழ்ச்சியிலும், பொதுமக்கள் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 30-ந்தேதி 570 காசுகளாக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்த முட்டை விலை நேற்று 630 காசுகளாக இருந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் முட்டையின் தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
வடமாநிலங்களில் குளிர் காலம் தொடக்கம் மற்றும் தீபாவளி பண்டிகையும் நெருங்கி வருவதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையை மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக 630 காசுகளாக இருந்த முட்டை விலை 640 காசுகளாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை விலை 70 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம், நாமக்கல் மாவட்ட சில்லரை விற்பனை கடைகளில் முட்டை விலை 7 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. முட்டை விலை உயர்வால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 120 ரூபாயாகவும், முட்டை கோழி விலை 100 ரூபாயாகவும் உள்ளது.