வணிகம்

வரத்து அதிகரிப்பு- முருங்கைக்காய் விலை சரிவு

காய்கறி கடைகளில் ஒரு கிலோ கேரட் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு வருகிறது.

இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி குவிந்தன. வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30வரை விற்பனை ஆகிறது.

இதேபோல் கத்தரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கடந்த வாரத்தை காட்டிலும் மொத்த விற்பனையில் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20வரை குறைந்து உள்ளது.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வரும் ஊட்டி கேரட் இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.75க்கு விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ கேரட் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விபரம் (கிலோ வில்) வருமாறு:-

தக்காளி-ரூ.10 முதல் ரூ.20வரை, நாசிக் வெங்காயம்- ரூ.25 முதல் ரூ.35 வரை, சின்ன வெங்காயம்-ரூ.50 முதல் ரூ.70 வரை, கத்தரிக்காய் -ரூ.30, பீன்ஸ் -ரூ.60, வெண்டைக்காய்-ரூ.20, அவரைக்காய் -ரூ.40, ஊட்டி கேரட்-ரூ.75,பீட்ரூட்-ரூ.30, பீ ர்க்கங்காய்-ரூ.40, பன்னீர் பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, கொத்தவரங்காய்- ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, சவ்சவ்- ரூ.25, வெள்ளரிக்காய்- ரூ.35, பச்சை மிளகாய்-ரூ‌.30, இஞ்சி-ரூ.150.