உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைனான்ஸ் (Binance) நிறுவனத்தில், பயனர்கள் முதலீடு செய்து வைத்திருந்த சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பயனர்கள் தங்களது டிஜிட்டல் சொத்துகளை வாங்கவும் விற்பனை செய்யவும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடவும் கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வகையான டிஜிட்டல் பரிவர்த்தனையில் பைனான்ஸ் (Binance) நிறுவனம் கடந்த 2017 தொடங்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பைனான்ஸ் நிறுவனத்தில் பயனர்கள் முதலீடு செய்து வைத்திருந்த சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சொத்துகள் திருடப்பட்டு விட்டதா அல்லது எந்த அளவில் சேதம் ஏற்பட்டது என்பது குறித்து பைனான்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தவில்லை.
இந்த சம்பவம் குறித்து பைனான்ஸ் நிறுவனம் கூறுகையில், பிரச்சனையை தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வதோடு, சட்ட அமலாக்கத்துறை மற்றும் தொழில் கூட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் தங்களது பைனான்ஸ் நிறுவனத்தில், டிஜிட்டல் சேமிப்பு மற்றும் பணம் எடுக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இதுவரை சுமார் 6.3 பில்லியன் டாலர் (ரூ.60,000 கோடி) தொகையானது ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அந்த சொத்துகளில் சுமார் 3 பில்லியன் டாலர் (ரூ.30,000 கோடி) சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் நிதிகளை கண்டறிந்து முடக்குவதற்காக, பிளாக்செயின் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்ட விசாரணையில், ஹேக்கிங் சம்பவத்திற்கு பின்னால் டெவொப்ஸ் பொறியாளர் ஒருவரின் லேப்டாப் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான டி.ஆர்.எம் கூறுகையில், பைனான்ஸில் நடந்த 60,000 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி ஹேக்கிங்கிற்கு பின்னால் வட கொரியா இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்வத்தை தொடர்ந்து, பல்வேறு கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் தங்களது சொத்துகளை முடக்கியுள்ளன.
டெதர் தலைமை நிர்வாக அதிகாரி பாலோ ஆர்டோயினோ, தங்களது நிறுவனத்தில் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சர்க்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்மி அல்லேர், சுமார் 800 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதிகளை தங்கள் நிறுவனம் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.