சென்னை:
தமிழகத்தில் கடந்த 20-ந்தேதி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த உயர்வு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறைக்கப்பட்டது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3400 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
820 வழித்தடங்களில் செல்லும் மாநகர பஸ்களில் தினமும் 48 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். புறநகர் பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஒரே நாளில் 3 பஸ்களில் மாறிமாறி செல்பவர்களுக்கு ஒருநாள் பயண டிக்கெட் பயனுள்ளதாக இருந்தது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த டிக்கெட் செல்லும். இதில் தினமும் சராசரியாக 5 லட்சம் பேர் பயணம் செய்தனர்.
ரூ.50-க்கு வழங்கப்பட்ட ஒரு நாள் பயண டிக்கெட் பஸ் கட்டண உயர்வு அறிவிப்புக்கு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஒருநாள் பயண டிக்கெட் விலை ரூ.50-லிருந்து ரூ. 80 ஆக அதிகரிக்கப்படுகிறது என்றும், வருகிற 8-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதே போல ரூ.1000-த்துக்கு வழங்கப்பட்ட மாதாந்திர மாநகர பஸ் பாஸ், கட்டண உயர்வுக்கு பிறகு அதன் விலை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு மாதாந்திர பஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு அதில் உள்ள தேதி வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மாதாந்திர பஸ் பாஸ் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த பஸ் பாஸ் ஒவ்வொரு மாதமும் 7-ந் தேதி வழங்கப்படும். அதன் படி பஸ் பாஸ் நாளை வழங்கப்பட வேண்டும்.
இதையடுத்து மாதாந்திர பஸ் பாஸ் கட்டண உயர்வு பற்றி இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது.
ரூ.1000-லிருந்து ரூ.1,300 ஆக உயர்த்தப்படும் என்று தெரிகிறது. மேலும் அலுவலகம், நிறுவனங்களில் பணி புரிபவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக்கூடிய மாநகர பஸ் பாஸ் கட்டணமும் உயருகிறது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து அதிகாரி கூறுகையில், “மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் பயணிகளுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் கட்டணம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுபற்றி தற்போது எதுவும் கூற முடியாது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்“ என்றார். #Busfarehike #Monthlybuspasshike #tamilnews