சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது, அவர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுபற்றி சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்திதான் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டுமே தவிர அதை ஒடுக்க நினைப்பது முறையல்ல.
வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது என்றும், வேலைக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்துள்ளதாக செய்திகள் வருகிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் கோர்ட்டு உத்தரவு நகல் கிடைக்கவில்லை. எங்களை பொறுத்தவரை நீதிமன்றம் தீர்ப்பு ஒருதலைபட்சமானது.
தொழிற்சங்கத்தை சேர்ந்த யாரையும் கலந்து பேசாமல் தன்னிச்சையாக போடப்பட்ட உத்தரவாகவே இதை கருதுகிறோம்.
எங்களுக்கு கோர்ட்டு நகல் கிடைக்கப் பெற்றதும் திங்கட்கிழமை கோர்ட்டுக்கு சென்று எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வோம்.
தொழிலாளர்களின் பணம் 7 ஆயிரம் கோடி ரூபாயை அரசு வைத்துக் கொண்டு திருப்பி தராமல் செலவழிக்கிறது. ஓய்வு பெற்ற ஊழியர்கள் வெறும் கையுடன் வீட்டுக்கு செல்கிறார்கள்.
பஸ் நடத்துனர் ஒருவர் அன்றைய கலெக்ஷன் பணத்தை டெப்போவில் செலுத்தாவிட்டால் கையாடல் செய்ததாக உடனே அவரை சஸ்பெண்ட் செய்து விடுவார்கள். பணம் குறைந்தாலும் கையில் உள்ள பணத்தை போட்டு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் உடனே நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.
அப்படி இருக்கும் போது தொழிலாளர்களின் பணத்தை அரசு வைத்து கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறதே இதுவும் ஒருவகை கையாடல்தான். இதற்கு அரசு மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
இதை ஐகோர்ட்டில் நாங்கள் எடுத்து சொல்லி எங்கள் தரப்பு நியாயத்தை முன் வைப்போம்.
எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைக்கு திரும்ப மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilNews