தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
அரசு பஸ் ஊழியர்களுக்கான 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, கோவை, ஈரோடு போன்ற தமிழ்நாட்டின் பல நகரங்களில் தனியார் பஸ்கள் ஓடுகின்றன. இதனால் அங்கு நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது. அதிலும் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. இதனால் நெரிசலில் சிக்கி பயணித்தனர்.
ஆனால் அரசு விரைவு பஸ்கள் ஓடாததால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ் ஸ்டிரைக் நடப்பது தெரியாமல் வெளியூர் சென்ற பொதுமக்கள் ஊர் திரும்ப முடியாமல் விடிய விடிய பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.
சென்னையில் பயணிகள் போக்குவரத்தில் 3600-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் வழக்கமாக ஓடும். ஊழியர்கள் வேலைக்கு வராததால் இதில் 500 பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து கோயம்பேடு வந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
நிலைமையை சமாளிக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். கல்வீச்சு மற்றும் தாக்குதல் சம்பவம் காரணமாக அவர்களும் அச்சத்துடனேயே பஸ்களை இயக்கி வருகிறார்கள். தாக்குதலில் இருந்து தப்பிக்க சாதாரண உடை அணிந்தும், முகத்தை துணியால் மூடிக் கொண்டும் பஸ்களை இயக்கினார்கள். என்றாலும் ஒருசில பஸ்களையே ஓட்டி நிலைமையை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து அதிகாரிகள் திணறினார்கள்.
பஸ் ஸ்டிரைக் காரணமாக தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னையில் இருந்து கோவை, நெல்லை, திருவாரூர் மார்க்கத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. அவற்றில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. ஏராளமானவர்கள் படிக்கட்டில் கூட நிற்க இடம் இல்லாமல் தொற்றிக் கொண்டு பயணம் செய்தனர்.
இதேபோல் சென்னை நகரில் கூடுதலாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டாலும் கடுமையான நெரிசல் காரணமாக பெண்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
இன்று 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக் நீடித்தது. நேற்று போலவே இன்றும் 500 பஸ்கள்தான் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து கடுமையான சிரமத்துக்கு ஆளானார்கள்.
இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே போன்ற முக்கிய இடங்களுக்கு செல்ல தனியார் பஸ்களுக்கும், மினி பஸ்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து வெளியூர்களில் இருந்து தனியார் பஸ்களும், மினி பஸ்களும் சென்னைக்கு வந்தன. உடனடியாக அவை, சென்னையின் முக்கிய இடங்களுக்கு விடப்பட்டன.
அதில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தனியார் பஸ் ஊழியர்களுக்கு பஸ் கட்டண நிர்ணயம் தெரியாததால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
வழக்கமான பஸ்கள் இயங்காததால் சென்னையில் வங்கிகள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோர் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கூடுதல் கட்டணம் கொடுத்து டாக்சி, ஆட்டோவிலும், உறவினர்களது இருசக்கர வாகனங்கள் மூலமும் அலுவலகம் சென்றனர். மேலும் பல ஊழியர்கள் பஸ் கிடைக்காமல் வேலைக்கு வராததால் அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே இருந்தனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
கோயம்பேட்டில் இருந்து பெங்களூர், திருப்பதி, நெல்லூர், கேரளா போன்ற வெளிமாநிலம் செல்லும் தமிழக அரசு பஸ்களும் ஓடவில்லை. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று வெளியூர்களுக்கு சில விரைவு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. ஆனால் அவற்றில் கூட்டம் இல்லை.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று பெரம்பூர் டெப்போவுக்கு சென்று அரசு பஸ்கள் இயக்கப்படுவதை ஆய்வு செய்தார்.
வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். எனவே அச்சமின்றி பணியில் ஈடுபடு மாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 75 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன என்றார். ஆனால் தொழிற்சங்கங்கள் தரப்பில் கூறும்போது, 10 சதவீத பஸ்களே ஓடுவதாகவும் அதுவும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை கொண்டு இயக்கப்படுவதாக வும் தெரிவித்தார்.
பஸ் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் உள்ள 32 பஸ் டெப்போக்களிலும் இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முக்கிய பஸ் நிறுத்தங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
அரசு பஸ் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் யாசின் பேகம் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.