செய்திகள்

பஸ் ஸ்டிரைக்: தி.மு.க., கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தூண்டுகின்றன- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு

பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தூண்டி விட்டனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #TNAssembly

மாலை மலர்

சென்னை:

சட்டசபையில் இன்று பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை கிளப்பிய எதிர்கட்சியினருக்கு பதில் அளித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

போக்குவரத்து கழக ஊழியர்களின் பேச்சு வார்த்தை முடிவுற்று தொழிற்சங்கங்கள் அதில் கையெழுத்தியிட்டன. எனவே இது முடிவுற்ற பேச்சுவார்த்தை. இதில் ஊழியர்களுக்கு அதிகமாகவே சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில தொழிற்சங்கங்கள் தவறான கருத்தை பரப்பி 600, 700 ரூபாய் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இது தவறு.

இந்த அரசுக்கு 15 ஆண்டாக நிதிச்சுமை இருக்கிறது. போக்குவரத்து கழக பணம் எங்கே செல்கிறது என்கிறார்கள். உதாரணத்துக்கு வசந்தகுமார் எம்.எல்.ஏ. மட்டும் 42 பஸ் விடுமாறு கேட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 22 ஆயிரம் பஸ்களில் 12 ஆயிரம் பஸ்கள் கிராம பகுதிகளில் ஓடுகிறது.

கிராமத்தில் இயங்கும் பஸ்களால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை அரசு ஏற்கிறது. நரிக்குடி என்ற கிராமத்துக்கு 57 கிலோ மீட்டர் தூரம் சென்று வரும் போது ரூ.72 தான் வசூலாகிறது. இந்த பாதிப்பை அரசே ஏற்கிறது. எனவே போக்குவரத்து கழக பணம் மக்களுக்குத்தான் போகிறது. வேறு எங்கும் போகவில்லை.

ஒரு நாளைக்கு ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. இந்த ஒப்பந்தத்தை தொ.மு.ச., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்து அதிகமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. எனவே ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று தொழிற்சங்கங்கள் பணிக்கு திரும்ப எதிர் கட்சி தலைவரும், மற்ற உறுப்பினர்களும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின்:- தொழிற்சங்கங்களுடன் முதல்-அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தினால் சுமூகமாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

முதல்-அமைச்சர்:- எனது ஆலோசனையை பெற்றுதான் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். தி.மு.க. ஆட்சியிலும் ரூ.922 கோடி நிலுவை தொகை இருந்தது. தற்போது நிதி நெருக்கடி இருப்பது எதிர்கட்சிகளுக்கு தெரியும்.

ஓ.பன்னீர் செல்வம்:- போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே பேச்சுவார்த்தை தோல்வி என்று தி.மு.க., கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தினர் வாட்ஸ் அப்பில் பீதியை கிளப்பினார்கள். அவர்கள் பஸ் தொழிலாளர்களின் போராட்டத்தை தூண்டி விட்டனர்.

(இதற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.)

மு.க.ஸ்டாலின்:- வாட்ஸ் அப்பில் வரும் செய்தியை வைத்து துணை முதல்வர் சொல்கிறார். அப்படியானால் வாட்ஸ்அப்பில் வரும் அனைத்து செய்திகளையும் நாங்கள் சொல்ல அனுமதிப்பீர்களா? தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் அவமானப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

தொடர்ந்து விவாதம் நடந்தது. #TNAssembly #tamilnews