சென்னை:
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1½ லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஓய்வூதிய நிலுவை தொகைகளை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசு பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வு 2.57 மடங்காக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் அரசு தரப்பில் 2.44 மடங்கு ஊதியம் தர சம்மதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நேற்று முன் தினம் முதல் பஸ்களை இயக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக சுமார் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் பஸ் ஸ்டிரைக் இன்று (சனிக்கிழமை) 3-வது நாளாக நீடித்தது.
அரசு ஊழியர்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் அவர்கள் பஸ் ஸ்டிரைக் பாதிப்பில் இருந்து தப்பினார்கள். என்றாலும் பொதுமக்கள் தங்களது அன்றாட பணி நிமித்தமாக வெளியில் செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று 3-வது நாளாக இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது.
நீண்ட தூர பஸ்கள் செல்லாததால் சனி, ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். பெரும்பாலான பஸ் நிலையங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பஸ் போக்குவரத்தை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் தவித்தபடி இருந்தனர்.
இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்தும், டிரைவர், கண்டக்டர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி நீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கோர்ட்டு எச்சரித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசும் போக்குவரத்து தொழிலாளர்களை பணிக்கு திரும்பும்படி கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அரசு மற்றும் கோர்ட்டின் கோரிக்கைகளை ஏற்க அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இன்று 3-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்த பஸ்கள் அனைத்தும் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து தடைபட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளை சமாளிக்க தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ஐ.டி. நிறுவனங்களில் உள்ள பேருந்துகளை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தினசரி ரூ.600 சம்பளத்துக்கு தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
இன்றும், நாளையும் அவர்களிடம் ஆய்வு நடத்தப்படும். அதன் பிறகு அவர்கள் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
எனவே திங்கட்கிழமை முதல் தற்காலிக ஊழியர்கள் மூலம் போக்குவரத்தை சீர்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 14 தொழிற்சங்கத்தினர் இதுவரை சமரசம் ஆகவில்லை. திங்கட்கிழமை அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சென்னை ஐகோர்ட்டில் பதில் மனுவாக தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை நடந்த 22 சுற்று பேச்சுவார்த்தைகள் பற்றியும், தமிழக அரசு குறைவான ஊதிய உயர்வு தருவது பற்றியும் கோர்ட்டில் விளக்கம் அளிக்க தொழிற்சங்க பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர். எனவே இன்னும் சில தினங்களுக்கு 14 தொழிற்சங்கங்களின் ஸ்டிரைக் நீடிக்கும் என்று தெரிகிறது.
தொழிற்சங்கத்தினர் தங்கள் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவதால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கும் கடும் அவதி நீடித்தப்படி உள்ளது. இதை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து கழக டெப்போக்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் இன்று அரசு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதை தடுப்பதற்கும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.