செய்திகள்

வல்லம் அருகே இன்று அரசு பஸ்-லாரி மோதல்: 14 பேர் படுகாயம்

பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

சேலத்தில் இருந்து நாகை மாவட்டத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை நாகை மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் வரதராஜன் (வயது28) ஓட்டி வந்தார். பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உட்பட 23 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் தஞ்சை வல்லத்தை அடுத்த ஆலக்குடி அருகே அரசுபஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே நாகையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென நிலை தடுமாறிய பஸ் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பஸ்சில் இருந்த 6 பெண்கள் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். டிரைவர் வரதராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரையும் ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தஞ்சை வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.