செய்திகள்

கழுகுமலையில் பஸ் மோதி 20 அடி பள்ளத்தில் விழுந்த ஆட்டோ- டிரைவர் பலி

கழுகுமலையில் தனியார் பஸ் மீது ஆட்டோ மோதியதில் 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

கழுகுமலை:

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூரை சேர்ந்தவர் பிச்சை பாண்டி(வயது21). ஆட்டோ டிரைவர். ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இந்நிலையில் பிச்சைபாண்டி, பாலமுருகன் ஆகியோர் இன்று காலை வடக்குபுதூர் பால்பண்ணையில் இருந்து பாலை ஏற்றிக் கொண்டு கோவில்பட்டி அருகே உள்ள வானரம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். 

கழுகுமலை-கோவில்பட்டி சாலை அம்பேத்கர் நகர் வளைவு பகுதியில் வந்த போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) காளியப்பன் தலைமையிலான வீரர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் கழுகுமலை போலீசார் படுகாயமடைந்த பாலமுருகனை கழுகுமலை அரசு மருத்துவமனையிலும், பிச்சைபாண்டியை கோவில்பட்டி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்நிலையில் கோவில் பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் பிச்சைபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து கழுகுமலையை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ரவிசந்திரன்(47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.