சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளின் கட்டணத்தை திடீரென்று கடந்த 19.1.2018 அன்று இரவு உயர்த்தி, 20.1.2018 அன்றே இரவோடு இரவாக அமலுக்கு வந்திருப்பதால், இந்த அதிபயங்கரத் தாக்குதலின் காரணமாக, வாங்கும் சக்தியோ தாங்கும் சக்தியோ எதுவுமற்ற அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உறைந்து போயிருக்கிறார்கள்.
மாநிலம் முழுவதும் ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்வந்து நடத்தும் தன்னெழுச்சியான போராட்டங்களின் வாயிலாக வெகுமக்களின் கொந்தளிப்பையும் கோபத்தையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன்.
“அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது”என்ற நிலைப்பாட்டை எடுத்து அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்ற இந்த அரசு, போக்குவரத்துக் கட்டண உயர்வு என்ற அரசின் கொள்கை முடிவு தொடர்பாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 24.11. 2017 அன்று தெரிவித்த கருத்தின் (டிடி) அடிப்படையில் 3600 கோடி ரூபாய் அளவிற்கு கட்டண உயர்வை அறிவித்திருப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தையும் கபட நாடகத்தையும் காட்டுகிறது.
அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கட்டணம் குறைவு என்று அரசுத் தரப்பில் வாதிட முயற்சித்தாலும், பத்திரிகையில் அதற்கு மாறான செய்திகள் வெளி வந்துள்ளதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தை சீர் செய்வது, வருமானத்தைப் பெருக்குவது, வருவாய் கிடைக்கும் வழித்தடங்கள் அனைத்திலும் அரசுப் பேருந்துகளை இயக்குவது, புதிய பேருந்துகளை வாங்கி எரி பொருள் இயக்கத்திறனை அதிகரிப்பது, நவீன அணுகுமுறையில் விளம்பர உத்திகளை கையாள்வது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க வைக்கவும், போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையாகச் சேரவேண்டிய சலுகைகளை பிடித்து வைத்துக் கொள்ளாமல் காலமுறைப்படி வழங்கவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யவும் பேருதவியாக இருக்கும்.
மக்களின் சேவைக்காகவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அந்த அடிப்படை நோக்கத்தை சிதறடிக்கும் விதத்திலும் நாட்டுடைமைத் தத்துவத்தைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த பேருந்துக் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தி தண்டிப்பதைப் போன்றதாகும்.
இந்தக் கட்டண உயர்வால் ஏற்கனவே விலைவாசி உயர்வால் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மேலும் தாங்க முடியாத இன்னொரு கட்டண சுமை, விலைவாசி உயர்வு ஆகிய இரட்டிப்பு சுமையை தாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குரியது.
ஆகவே தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையினை ஏற்றும், மாநிலம் முழுவதும் மக்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக நடத்திக் கொண்டிருக்கும் போராட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், 19.1.2018 அன்று தமிழக அரசு அறிவித்துள்ள 67 சதவீதம் முதல் 108 சதவீதம் வரையிலான ரூபாய் 3600 கோடி ரூபாய் அளவிலான பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #busfareshike #tamilnews