செய்திகள்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி மாட்டுவண்டியில் சென்று செவிட்டு மிஷின் அனுப்பும் போராட்டம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு அதிகாரிகளுக்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று தபால் நிலையம் மூலம் செவிட்டு மிஷின் அனுப்பும் போராட்டம் இன்று நடந்தது.

மாலை மலர்

அம்பத்தூர்:

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத அரசு அதிகாரிகளுக்கு மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று தபால் நிலையம் மூலம் செவிட்டு மிஷின் அனுப்பும் போராட்டம் இன்று நடந்தது.

இந்திய ஜனநாயக சங்கம் சார்பில் அயனாவரம் பஸ் நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கார்த்திக் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அதைதொடர்ந்து அயனாவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் தளவாய் சாமி ஆகியோர் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் 2 தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அயனாவரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

பஸ் கட்டணம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வளசரவாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விருகம்பாக்கம் தொகுதி தலைவர் முகமது ஈஷா தலைமை தாங்கினார்.

இதில் தென்சென்னை மாவட்ட தலைவர் முகமது சலிம், பொதுச்செயலாளர்கள் அன்சாரி, பைரோஸ்பாபா, மாவட்ட செயலாளர் ரசாக் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.