விபத்தில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. 
செய்திகள்

திண்டிவனம் அருகே சொகுசு பஸ் மீது கார் மோதல்- வனத்துறை அலுவலர் பலி

திண்டிவனம் அருகே சொகுசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் வனத்துறை அலுவலர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தினால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாலை மலர்

திண்டிவனம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா எடுத்தவாய்நத்தம் அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர்ஆறுமுகம் (வயது 72) ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். இவர் வெளிநாட்டில் இருந்து வந்த தனது மகன் செந்தில் (35)மற்றும் மருமகள் லோகேஸ்வரியை(27) விமான நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு பரிகம் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

காரை கச்சிராபாளையத்தை சேர்ந்த பிரசாந்த் (27)என்பவர் ஓட்டி வந்தார்.

கார் திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது காருக்கு முன்னால் சென்ற தனியார் சொகுசு பஸ் டிரைவர் பிரேக் போட்டார். இதில் எதிர்பாராத விதமாக கார் திடீரென பஸ்சின் பின்பக்கம் மோதியது.

அப்போது காருக்கு பின்னால் வந்த டிப்பர் லாரியும் அதிவேகமாக மோதியது. பஸ்சுக்கும், லாரிக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில் ,லோகேஸ்வரி, டிரைவர் பிரசாந்த் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் ஆறுமுகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றவர்களை ரோசனை இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தினால் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை போலீசார் சரி செய்தனர்.