செய்திகள்

திண்டுக்கல் அருகே அரசு பஸ் - கார் மோதல்: 4 பேர் உடல் நசுங்கி பலி

திண்டுக்கல் அருகே இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். #buscarcrash

மாலை மலர்

திண்டுக்கல்:

மதுரை பி.பி.குளத்தைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. அவரது மகன் திருமச்சன் (வயது 14). இவர் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் வந்துள்ளர்.

இவரை பள்ளியில் விடுவதற்காக இன்று காலை முத்துலெட்சுமி, அவரது உறவினர் சித்ரா, மகன் திருமச்சன், மகள் லெட்சுமி ஆகியோர் மாருதி காரில் மேட்டுப்பாளையம் புறப்பட்டனர்.

இந்த கார் ஒட்டன்சத்திரம் அருகே பலக்கனூத்து பிரிவு பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வேகமாக வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் முத்துலெட்சுமி, சித்ரா, லெட்சுமி மற்றும் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

பலியான கார் டிரைவர் பெயர் தெரியவில்லை. உடனடியாக தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து 4 பேரின் உடல்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமச்சன் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். அவரை போலீசார் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்தது. அதனை மீட்கும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews  #buscarcrash