செய்திகள்

அவினாசி அருகே பஸ்-மொபட் மோதல்: ஓய்வுபெற்ற மின் ஊழியர் பலி

அவினாசி அருகே தனியார் பஸ் திடீரென மொபட் மோதியதில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

அவினாசி:

கோவை மாவட்டம் அன்னூர் சென்னப்ப செட்டி பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 74). ஓய்வுபெற்ற மின் ஊழியர். நேற்று அன்னூரில் இருந்து திருப்பூருக்கு ரங்கசாமி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவினாசி கால்நடை மருத்துவமனை அருகே திருப்பூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ஒரு தனியார் பஸ் வந்தது. திடீரென தனியார் பஸ் , ரங்கசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் சென்டர் மீடியனில் மோதி நின்றது.

இதில் பஸ்சில் இருந்த ஊட்டியை சேர்ந்க மணிகண்டன் (14), பந்தலூர் ராஜலட்சுமி (62), கோத்தகிரி பெல்லான் (61) மற்றும் ரஞ்சினி (20) உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அவினாசி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.