செய்திகள்

சுசீந்திரம் அருகே 3 அரசு பஸ்கள் அடுத்தடுத்து மோதல்: பயணிகள் படுகாயம்

சுசீந்திரம் அருகே ஒரே நேரத்தில் 3 பஸ்கள் மோதிய விபத்தால் பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

என்.ஜி.ஓ.காலனி:

சுசீந்திரம் ஆனைப்பாலம் அருகே இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு அரசு டவுண் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் வந்ததும் அந்த பஸ்சின் டிரைவர் பஸ்சை நிறுத்தி அதில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கிக்கொண்டிருந் தார்.

சிறிதுநேரம் கழித்து அந்த பஸ்சை டிரைவர் மீண்டும் ஓட்டிச்சென்றார். சிறிது தூரம் சென்றதும் அந்த பஸ்சின் குறுக்கே ஒரு வாகனம் கடந்து சென்றதால் விபத்தை தடுக்க அரசு பஸ்சை டிரைவர் திடீர் பிரேக்போட்டு நிறுத்தினார். அப்போது அந்த பஸ்சின் பின்னாள் வடசேரியில் இருந்து கோட்டையடி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு டவுண் பஸ்சும், ஊட்டியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சும் வந்து கொண்டிருந்தது.

முன்னாள் சென்ற பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் அதன் பின்னால் வந்த மற்ற 2 அரசு பஸ்களும் அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அந்த பஸ்களும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

ஒரே நேரத்தில் நடுரோட்டில் 3 பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். மேலும் இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் பின்னால் வந்த 2 பஸ்களிலும் பயணம் செய்த சில பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. பலர் சீட்டில் இருந்து தவறி கீழே விழுந்து லேசான காயத்துடன் தப்பினர்.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்தையும் அவர்கள் சீரமைத்தனர். இந்த விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

SCROLL FOR NEXT