போராட்டம் 
செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் மீது பஸ் ஏறியது - பயணிகள் மறியல் போராட்டம்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணி மீது பஸ் ஏறியதாலும் சரியாக பஸ்கள் இயக்கப்படாததாலும் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென பஸ் நிலையத்துக்குள் கோ‌ஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

போரூர்:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை யொட்டி நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

நள்ளிரவு 1 மணியளவில் திருச்சி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அதிகம் இல்லாததால் பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்து நின்றனர்.

அப்போது அங்கு வந்த திருச்சி செல்லும் பஸ்சில் பயணிகள் முண்டியடித்து ஏறினர். இதில் பெரம்பலூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பவர் பஸ்சில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார்.

பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கிய செல்வராஜ் மீது பஸ் ஏறி இறங்கியது. அதில் தொடை மற்றும் வலது கால் நசுங்கியது. பலத்த காயம் அடைந்த செல்வராஜை பயணிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பயணி மீது பஸ் ஏறியதாலும் சரியாக பஸ்கள் இயக்கப்படாததாலும் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென பஸ் நிலையத்துக்குள் கோ‌ஷமிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருமங்கலம் உதவி கமி‌ஷனர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் பஸ் நிலைய மேலாளர் ரகுராமன் ஆகியோர் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து திருச்சி, திருவண்ணாமலை, வந்தவாசி, கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதல் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 1½ மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் பஸ் நிலையம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

SCROLL FOR NEXT