செய்திகள்

கோவையில் தலையில் கல்லை போட்டு கட்டிட தொழிலாளி படுகொலை

கோவையில் தலையில் கல்லை போட்ட நிலையில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கோவை கோவில்பாளையம் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவருக்கு மாணிக்கம் என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை ரமேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வரதங்கையர் பாளையம் லட்சுமி கார்டன் பகுதியில் தலையில் கல்லை போட்ட நிலையில் ரமேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரமேஷ், கொலை செய்யப்பட்ட இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும்.

இதனால் நள்ளிரவில் ரமேஷ் நண்பர்களுடன் சென்று மது குடித்த போது போதையில் நண்பர்கள் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் பெண் தொடர்பில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

ரமேசை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை நடந்தது? என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.