புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்றத்தின் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2020-2021ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் ஆகும்.
வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி மந்திரிகள் சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் இந்த நடைமுறையை நிர்மலா சீதாராமன் மாற்றினார். கடந்த ஆண்டு அரசு சின்னம் பொறிக்கபட்ட பையில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வந்தார். அதேபோல் இன்றும் அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் கொண்டு வந்தார்.
இந்த பட்ஜெட்டை பொருத்தவரையில், வழக்கம்போலவே தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. முக்கிய தொழில் துறைகள் முடங்கி, பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ள நெருக்கடியான சூழ்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஏற்ற வகையில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா? என்று தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.