செய்திகள்

மத்திய பட்ஜெட்: ஏமாற்றமான நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள்

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நடுத்தர மக்களை ஏமாற்றியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். #Budget2018 #UnionBudget2018

மாலை மலர்

பாராளுமன்றத்தில் இன்று 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுகாதாரம், பாதுகாப்பு, ரெயில்வே உள்ளிட்ட துறைகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம், டிஜிட்டல் இந்தியா, வரி வருவாய் அதிகரிப்பு என பட்ஜெட்டில் பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், முக்கியமாக அனைத்து தரப்பு மக்களாலும் எதிர்பார்க்கப்பட்டது தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்புதான்.

2014-ம் ஆண்டு மோடி அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு விலைவாசி பல மடங்கு உயர்ந்தபோதும், வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.

ரூ.2.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 5 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிக வருவாய் வந்தால் 30 சதவித வரியும் செலுத்த வேண்டும்.

இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வரிச்சலுகைகள் கிடைக்கும் என நடுத்தர வர்க்கத்தினர் இந்த ஆண்டின் பட்ஜெட்டை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக, வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் இந்த உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது நடுத்தர மக்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வரி விலக்கு உச்சவரம்பு குறைக்கவில்லை என்றாலும், வரி சதவிகிதத்தையாவது குறைத்திருக்கலாம் என்று சாமானியர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரமாக உயர்த்தியிருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன்படி சம்பளதாரர்கள் மருத்துவ மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.