செய்திகள்

பி.எஸ்.என்.எல். சார்பில் கேரளாவில் முதல் முறையாக 4ஜி சேவை அறிமுகம்

நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 4ஜி செல்போன் சேவை நேற்று முதல் பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தரைவழி டெலிபோன் மற்றும் செல்போன் சேவைகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த நிறுவனமாக பி.எஸ்.என்.எல். திகழ்ந்து வந்தது. தரைவழி டெலிபோன் சேவையில் அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்ததால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

செல்போன் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து ஏராளமான தனியார் தொலைபேசி நிறுவனங்கள் களத்தில் குதித்தன. அந்த நிறுவனங்கள் 4ஜி சேவையையும் வழங்கி வருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் 4ஜி சேவை வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து தற்போது பி.எஸ்.என்.எல். நிறுவனமும் 4ஜி சேவை வழங்கி உள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 4ஜி செல்போன் சேவை நேற்று முதல் பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள உடும்பன்சோலை, கல்லுப்பாலம், செம்மன்னார், உடும்பன்சோலை நகரம் மற்றும் சேனாபதி ஆகிய 5 இடங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை டவர்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் கேரள மாநிலம் முழுவதும் 4ஜி செல்போன் சேவை வழங்கப்படுமென்று பி.எஸ்.என்.எல். நிறுவன கேரள தலைமை பொதுமேலாளர் மேத்யூ தெரிவித்தார். #tamilnews

SCROLL FOR NEXT