செய்திகள்

திருப்பனந்தாள் அருகே தம்பியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்

திருப்பனந்தாள் அருகே தம்பியை உருட்டுக்கட்டையால் அண்ணன் அடித்து கொன்றார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாலை மலர்

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே தம்பியை உருட்டுக்கட்டையால் அண்ணன் அடித்து கொன்றார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குருகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து இவரது மகன்கள் கலைச்செல்வன் (வயது 42). செந்தில்குமார் (39).

இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார், மதுகுடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு நின்ற கலைச்செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் கலைச்செல்வனின் மனைவி மாலா, மகன் விமல் ஆகியோர் செந்தில்குமாரை தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அவர்களையும் சத்தம் போட்டு திட்டினார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வன் ஆவேசத்துடன்அருகே கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து செந்தில்குமாரை, சரமாரியாக தாக்கினார். மேலும் மாலாவும், விமலும் சேர்ந்து தாக்கினர்.

3 பேரும் தாக்கியதால் செந்தில்குமார் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் செந்தில்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதையில் தகராறு செய்த தம்பியை அவரது அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது மகன் என 3 பேரும் சேர்ந்து அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.