செய்திகள்

போலீஸ் நிலையத்தில் சகோதரன் மர்ம மரணம்: சி.பி.ஐ. விசாரணை கேட்டு 767 நாட்களாக போராடும் வாலிபர்

கேரள போலீஸ் நிலையத்தில் சகோதரன் மர்மமாக உயிரிழந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணை கேட்டு 767 நாட்களாக போராடும் வாலிபருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜிவ்.

ஸ்ரீஜிவ்வை கடந்த 2014-ம் ஆண்டு ஒரு வழக்கு விசாரணைக்காக பாறசாலை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர், மர்மமான முறையில் இறந்து போனார். ஸ்ரீஜிவ் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை ஸ்ரீஜிவ்வின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும், ஸ்ரீஜிவ்வின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது சகோதரர் ஸ்ரீஜித், மாநில அரசிடம் மனு கொடுத்தார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித் திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்றுடன் போராட்டம் தொடங்கி 767 நாட்கள் ஆகிறது.

ஆனால் ஸ்ரீஜித்தின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஸ்ரீஜித்தின் போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதையடுத்து பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா, மாநிலத் தலைவர் பிரகாஷ் பாபு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுதீரன் ஆகியோர் ஸ்ரீஜித்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதுபோல இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் போராட்ட பந்தலில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீஜித்தை அழைத்து சமரசம் செய்தார். போராட்டத்தை கைவிடும்படியும், அவரது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய முயற்சி எடுக்குமென்றும் கூறினார்.

இத்தகவல் ஸ்ரீஜித்தின் தாயார் ரமணி பிரமிளாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும் என்ற உத்தரவு வெளியாகும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஸ்ரீஜித் தெரிவித்தார்.

அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் இப்பிரச்சினை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #tamilnews